போஸ்டர் செய்தி

201 பேருக்கு கலைமாமணி விருது: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, ஆக. 14–

நடிகைகள் வைஜெயந்தி மாலா, காஞ்சனா, நளினி, நடிகர்கள் கார்த்தி, பாண்டியராஜன், சசிகுமார், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.

விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்கள் மேடைக்கு வந்து விருதுகளை பெறுவது சிரமம் என்று எடப்பாடி பழனிசாமி கருதினார்.

இதையடுத்து பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த கலைஞர்கள் 20 பேருக்கு மேடையில் இருந்து கீழே இறங்கிச்சென்று விருதுகளையும், சான்றிதழ்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தற்போது இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், கிராமியக் கலை, ஓவியம், சிற்பம், விகடம் ஆகிய கலைப் பிரிவுகளையும், அவற்றின் உட்பிரிவுகளையும் சார்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைப் பிரிவுகளைச் சாராத பண்பாட்டுக் கலை பரப்புநர், ஒப்பனைக் கலைஞர், இசைக் கருவி தயாரிப்புக் கலைஞர் போன்ற கலைப் பிரிவுகளுக்கும் ‘‘கலைமாமணி” விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 1,594 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இன்று நடைபெறும் இந்த சீர்மிகு விழாவில் இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

8 மூத்த கலைஞர்களுக்கு ரூ.25 ஆயிரம் பொற்கிழி

மேலும், 8 மூத்த கலைஞர்களுக்கு அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, தலா 25 ஆயிரம் ரூபாய் பொற்கிழி, கலை வளர்ச்சிக்கு பாடுபட்ட மூன்று தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயம், சிறந்த முறையில் செயல்பட்டு வரும் ஒரு நாடகக் குழுவிற்கு சுழற்கேடயம், புகழ் பெற்ற இயல், இசை, நாட்டியக் கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் ஒன்பது கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பட்டயமும், இன்று இந்த விழாவில் வழங்கப்படவுள்ளன.

முதிய கலைஞர்களுக்கு அவர்கள் செய்த சேவைக்காகவும், வளர்ந்து வரும் இளைய இளைஞர்கள், ஊக்கமுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இங்கே விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நம் நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களும், நமது மொழி காக்க நடைபெற்ற போராட்டங்களும் வெற்றியடைந்ததில் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. நாட்டு மக்களிடையே மொழி உணர்வு, சுதந்திர உணர்வு ஏற்படுவதற்கு பல்வேறு இசைக் கருவிகளுடன் கலைஞர்கள் வீதிதோறும் பாடிய பாடல்களும், நாடக மேடைகளில் பேசிய வசனங்களும் அடிப்படையாக அமைந்தன.

கலைஞர்கள், நாம் நாட்டுக்காக வாழ்கிறோம் என்பதையும், நமது கலை, நாட்டு மக்களுக்காக, மக்களை மகிழ்விப்பதற்காகத் தான் என்பதையும் உணர்ந்து, கலைக்கு உயரிய சேவையையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப, கலைத் துறையில் உலகளவில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கலைஞர்கள், தான் கற்ற கலையின் ஆரம்ப நிலையிலேயே நிற்காமல், மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்கள் திறமைகளை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே, தான் பயின்ற கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற நிபுணத்துவத்தை தங்கள் கலைகளில் முறையாகக் கையாண்டு தாங்கள் சார்ந்த கலைக்கு மெருகேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று ‘கலைமாமணி பட்டம்’ பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்ட கலைக்கு சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நடிகர்கள் பாண்டியராஜன், சரவணன், ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, பாண்டு, சிங்கமுத்து, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் வைஜெயந்தி மாலா, நளினி, குட்டி பத்மினி, காஞ்சனா, கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, பாடகர் வேல்முருகன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் விருதை பெற்றனர். நடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவா விருதை அவருடைய தந்தையும் பெற்றுக்கொண்டனர். திருநங்கை சுதாவும் கலைமாமணி விருது பெற்றார். நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

இயல் துறையில் டாக்டர் கோவி மணிசேகரன், கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன், லேனா தமிழ்வாணன், டாக்டர் அமுதகுமார், பாலாரமணி, மணவை பொன் மாணிக்கம், அசோக்குமார், நெல்லை சுந்தர்ராஜன், கலை விமர்சகர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், நாட்டியத் துறையில் ரோஜா, கண்ணன், அனிதாகுமார், ராதிகா சுர்ஜித், லட்சுமி ராமசாமி, சூர்யா ஸ்ரீ, நாடகத் துறையில் குடந்தை மாலி, மாது பாலாஜி, டி.வி. வரதராஜன், சி.வி.சந்திரமோகன், இசைத்துறையில் நெய்வேலி ஆர். சந்தான கோபாலன், யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, அபஸ்வரம் ராம்ஜீ உட்பட மொத்தம் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் பாண்டியராஜன்

விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் ‘கலைமாமணி’ விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், எஸ். பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, கே.ஏ.செங்கோட்டையன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் சத்யா, நடராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *