ஈரோடு, டிச.21-
தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் வருகிற சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளை தாண்டி வெல்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சோலாரில் நேற்று அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.951 கோடியே 20 லட்சம் செலவில் முடிவுற்ற 559 பணிகளை திறந்து வைத்ததுடன், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.284 கோடியே 2 லட்சம் செலவில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார். அங்கு கோவை மாவட்டம் ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ரா.மோகன் கடந்த 10-ந் தேதி அன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஈரோடு மாவட்டத்துக்கு கள ஆய்வுக்கு சென்று வந்துள்ளீர்கள். மக்கள் என்ன சொன்னார்கள்?
பதில்:- கள ஆய்வினை பொறுத்தவரையில், இன்னும் வேகமாக உற்சாகத்தோடு அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கை நாங்கள் வைத்திருக்கிறோம். ஈரோடு கள ஆய்வில் நான் உணர்ந்த உணர்வு என்ன என்று கேட்டால், 200 தொகுதியையும் தாண்டிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி:- ராகுல்காந்தியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறதே?
பதில்:- அதை அவர் சட்டப்படியாக சந்திப்பார்.
கேள்வி:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வசமாகுமா ?
பதில்:- தி.மு.க. கூட்டணி வசமாகும். ஏற்கனவே `இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. எனவே `இந்தியா’ கூட்டணியின் வசமாகும்.
கேள்வி – ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா?
பதில்:- அதை முறையாக அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்போம்.
கேள்வி:- ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றி….
பதில்:- அதைப்பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன். அது கொடுமையான ஒரு முடிவு. `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக்கூடிய மோசமான செயலாகும்.
கேள்வி:- அமித்ஷா, அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக அடுத்து எந்த மாதிரி அணுகப்போகிறீர்கள். தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், எந்த மாதிரியான எதிர்ப்புகள் தெரிவிக்கப்போகிறீர்கள்?.
பதில்:- `இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அது குறித்து அறிவிப்போம் இவ்வாறு அவர் பதில் அளித்தார்.