செய்திகள்

5 ஆண்டுகளில் தோல் தொழில் துறையில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

Spread the love

சென்னை, செப்.23-

அடுத்த 5 ஆண்டுகளில் தோல் தொழில் துறையில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

தோல் தொழில்துறையை சேர்ந்த பணியாளர்களுடைய திறன்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விக்கான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கவும் தோல் துறை திறன் கழகம் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தோல் துறை திறன் கழகம் நடத்திய பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

இதில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை மந்திரி மகேந்திரநாத் பாண்டே கலந்துகொண்டு பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

விழாவில் மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே பேசியதாவது:-

பட்ஜெட்டில் கச்சா மற்றும் பாதியளவு தயாரிக்கப்பட்ட தோல்களுக்கு ஏற்றுமதி வரி சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தோல் தொழில் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தோல் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில், சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான குடை மற்றும் சிறு கடைகளை அமைத்து கொடுத்து உதவ வேண்டும்.

தோல் ஆடைகள் மற்றும் காலணி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. உலகின் மொத்த தோல் உற்பத்தியில் 13 சதவீத பங்கு வகிக்கிறது. வருங்காலத்திலும் இந்த துறை மேலும் வளர்ச்சியடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

ஆக்ரா, கான்பூர், ஆம்பூர் போன்ற தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் திறன் வாய்ந்த கைவினைஞர்கள், தரமான காலணிகளை தயாரித்து வருகின்றனர். தோல் துறையில் காலத்துக்கு ஏற்ற நாகரிக வடிவமைப்புகளை பின்பற்றவேண்டியது அவசியம்.

சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், கௌரவமான முறையில் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு, தோல் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கவுன்சில், தமது சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து உதவி செய்ய வேண்டும். காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடை மற்றும் சிறு கடைகளை அமைத்து கொடுத்து, அவர்களது தொழிலை முறைப்படுத்த உதவ முன்வரவேண்டும். தோல் தொழில் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *