செய்திகள்

திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Spread the love

திருச்சி, நவ. 8–

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உடனடியாக தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் இன்று காலை வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் – 37 பேர், வங்கதேசம் – 30 பேர், சீனா – 1, பல்கேரியா – 1, ரஷ்யா – 1, தென்னாப்பிரிக்கா – 1, ஜெர்மன் – 1 என மொத்தம் 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள், போலி பாஸ்போர்ட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு தண்டனை காலம் முடிந்ததும் விடுவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்கு அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தண்டனை காலம் முடிந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் சிலர் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என போராட்டங்களை நடத்துவதும் வழக்கம்.

இந்தநிலையில் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரி இலங்கை தமிழர்கள் 22 பேர், வங்கதேசத்தினர் 22 பேர், சீனா, பல்கேரியாவை சேர்ந்த 2 பேர் என 46 பேர் நேற்று முதல் முகாம் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

விஷம் எப்படி கிடைத்தது?

அவர்களுக்கு வழங்கப்பட்ட மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட மறுத்தனர்.

சிறப்பு முகாம் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் விடிய விடிய தொடா்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 46 வெளிநாட்டு கைதிகளில் 20 பேர் இன்று காலை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள முகாம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகாமில் கைதிகளுக்கு வி‌ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான வி‌ஷம் சாப்பிட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *