சபாநாயகர் அப்பாவு பேட்டி
நெல்லை, மார்ச் 5–-
சட்டசபையில் வருகிற 20–-ந் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இருக்கை ஒதுக்கீடு செய்து விட்டேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:–-
தமிழக சட்டமன்றத்தில் வருகிற 20–-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை எந்தவித சலசலப்புகளும் இல்லாத அளவுக்கு பேரவை நடைபெறும். மேலும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் முடிந்து விட்டது. அவர்களே அதைப்பற்றி பேசாத போது, நடிகர் வடிவேலு பாணியில் உசுப்பேத்தி விடுகிறீர்கள். சட்டசபையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது எனது உரிமை. அவரவருக்கு எங்கு ஒதுக்க வேண்டுமோ அங்கு இருக்கைகளை ஒதுக்கி விட்டேன். அதில் இருந்து அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்.
நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அங்குள்ள நிலத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே, அந்த பணியை மேற்கொண்டு, தொடர்ச்சியாக சிப்காட் தொழில் மையம் போன்று அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இதுவரை 1½ லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி நிச்சயமாக அறிவிப்பு வெளியாகும்.
இந்த அரசு சொல்வதை செய்கிற அரசு ஆகும். நெல்லை மாவட்டத்துக்கான தேவைகள் குறித்தும் முதலமைச்சரிடம் எடுத்து கூறி உள்ளோம். அவையும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.