பாட்னா, நவ. 17–
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கவர்னர் ஆரிப் முகமது கானிடம் வழங்கினார். 20–ந்தேதி மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு கவர்னர் ஆரிப் முகமது கானை நிதிஷ்குமார் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது புதிய அரசு பதவி ஏற்கும் வரை முதல்வராக நீடிக்க வேண்டும் என்று கவர்னர் கேட்டக் கொண்டதற்கு நிதிஷ்குமார் இசைவு தெரிவித்தார்.
நாளை பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.கூட்டம் நடைபெறுகிறது. அப்போது சட்டமன்ற கட்சி தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். இதனையடுத்து கவர்னரை சந்தித்து புதிதாக ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோருவார்.
இதனிடையே முதலமைச்சராக நிதிஷ்குமார் 20–ந்தேதி பதவி ஏற்பார் என்று அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் பிரேம் குமார் இன்று தெரிவித்தார்.
பாட்னா காந்தி மைதானத்தில் 20ந் தேதி நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிதிஷ்குமார் 10-வது தடவையாக முதலமைச்சர் பதவியை ஏற்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், சிராக் பாஸ்வான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற்றது. 14-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், பா.ஜனதா கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆர்ஜேடி, காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து பீகாரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு மத்திய அமைச்சர் நித்யானந்த ராய், பாஜக மூத்த தலைவர்கள் நிதின் நவீன், கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அவரை சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில் 18-வது புதிய சட்டசபையை அமைத்ததற்கான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான பணி வேகம் எடுத்தது. நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சர் பதவியில் அமர்த்த தயக்கம் காட்டி வந்த பா.ஜ.க., அவருக்கு முதலமைச்சர் பதவி அளிக்க சம்மதம் தெரிவித்தது. மேலும் கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் மந்திரி பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 6 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்தால், ஒரு மந்திரி பதவி என்ற வழிமுறை உருவாக்கப்பட்டது. அதன்படி, பா.ஜ.க.வுக்கு மந்திரிசபையில் கூடுதல் இடம் அளிக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதாவது பா.ஜ.க.வில் இருந்து 15 அல்லது 16 பேரும், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 14 பேரும் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. மேலும் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 3 மந்திரி பதவிகளும், மத்திய மந்திரி ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு மந்திரி பதவியும் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
![]()





