பயனுள்ள புது தகவல்களுக்கு காத்திருக்கும் உலகம்
ஆர். முத்துக்குமார்
மனித வரலாற்றில் சந்திரனில் கால் தடம் பதித்த நிகழ்வு மிகப்பெரிய சாதனையாகும். அதை அப்பல்லோ விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான குழு 1969 ஜூலை 20, அன்று சாதித்ததை உலகம் இன்று வரை ஆச்சரியத்துடன் சற்றே அவநம்பிக்கையுடனும் விவாதிக்கிறது.
அக்காலத்தில் தொலைதொடர்பு துவக்க கட்டத்தில் இருந்தது, கணினியுக சமாச்சாரங்கள் எதுவும் கைவசப்படாத காலமாகும். சோவியத் ரஷ்யாவும், அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகளும் கிட்டத்தட்ட நேரடி ஓட்டப் பந்தயத்தில் இருந்தது போன்று பல்வேறு புதுப்புது தொழில்நுட்பங்களை உருவாக்கி புதுப்புது சாதனைகளை செயல்படுத்தி வந்தது.
அதுவரை பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு வெளியேறுவதே சிரமம் என்றிருந்த நிலையை மாற்றி, மனிதன் வடிவமைத்த கருவி முதல்முறையாக நிலவின் புவி ஈர்ப்புக்குள் நுழைந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
அந்த ஆச்சரியங்களுக்கு நடுவே நாசா விஞ்ஞானிகள் மனிதனை அண்ட சராச ரகசியங்களை புதிய கோணத்தில் இருந்து ஆய்வு செய்ய துவங்கினர்.
அதன் பயனாக நாசா விஞ்ஞானிகள் மனிதனை நிலவில் தரையிறக்க வேண்டிய பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வியூகம் அமைத்து அதில் பெரிய வெற்றியையும் பெற்றனர்.
ஆனால் அங்கோ ஏதுமில்லா வெறுமையே இருப்பதாகவும், காற்று மண்டலம் இல்லாததால் மனிதன் வாழ வழி இல்லை என்ற கருத்தை வெளியிட்டனர். அது தான் உண்மை என புரிந்து கொண்ட பிறகு நிலவுக்கு இனியும் பல கோடிகள் செலவு செய்து கொண்டு இருப்பதால் எந்த லாபமும் இல்லை என அறிவித்து நிலவு பயணத்தை அன்றே கைவிட்டனர்.
ஆனால் 2008ல் சந்திரனை ஆராய்வதில் இந்தியாவும் வெற்றி கண்டது. அதன்படி நாமே வடிவமைத்த ராக்கெட்டில் சந்திரயான்–1 விண்கலம் சந்திர மண்டலத்தில் நிலவின் தரையில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் மட்டுமே சுற்றி வந்தது.
ஆனால் சந்திரயான் மிஷன் ஒன்றின் அதிமுக்கிய விஞ்ஞான கண்டுபிடிப்பாக நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.
உடனே சீனாவும் நிலாவுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த போட்டியில் அமெரிக்காவும் பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் துவக்கி முதல் முறையாக ஒரு பெண்ணை நிலவில் தரையிறக்க முடிவு செய்துள்ளது.
இரண்டாவது முறையாக நாம் சந்திரயான்–2 களத்தை 2019 செப்டம்பர் 6–ல் நிலவுக்கு அனுப்பி தரையிறங்கிட முற்பட்டோம். ஆனால் சாப்ட்வேர் கோளாறு காரணமாக அது தோல்வியை இறுதி நொடியில் சந்தித்தது.
அந்த தோல்வி நொடிக்கு முன்பு கிடைத்த பல அரிய தகவல்கள் நிலவின் இருள் பகுதியாக இருக்கும் பிரதேசத்தை பற்றிய பல்வேறு புதுப்புது தகவல்களை பெற முடிந்தது.
அந்த தோல்வியை தாங்கிக் கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த மாதம் மீண்டும் சந்திரனில் சாதிக்க விண்கலத்தை அனுப்பி விட்டனர்.
ஜூலை 14, ஸ்ரீஹரிகோட்டோவில் இருந்து நிலவை நோக்கி சந்திரயான் –3 சீறிப்பாய்ந்து புறப்பட்டது.
தற்போது, சந்திரயான்–-3 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் விண்கலம் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்துஎல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.அந்த வகையில், சந்திரயான்–-3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஏதுவாக, அதில் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இதன்மூலம் குறைந்தபட்சம் 236 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1 லட்சத்து 27,609 கி.மீ. தூரம் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் செலுத்தும் முயற்சி ஜூலை 31 நள்ளிரவு 12.05 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிக்கலான இப்பணியை முடித்து, சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.சுற்றுப்பாதை மாற்றம் என்பது சந்திரயான்–-3 விண்கல பயணத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அது நல்லபடியாக முடிந்துள்ளது.
40 நாட்களில் 3,84,000 கிலோ மீட்டரை பயணித்து ஆகஸ்ட் 24 அன்று இந்திய நேரப்படி அதிகாலை நிலவில் தரையிறங்கும்!
சந்திரயான்–1 நமக்கு நிலவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. இம்முறை சந்திரயான்–3 நமது பூமியுடன் தொப்புள்கொடி உறவுகள் கொண்ட நிலாவில் நிகழும் ஆய்வுகளால் பல புதுப்புது தகவலைத் திரட்டி மனித வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லாகவே இருக்கப் போகிறது.
உலக வெப்பமயம் மாறி, அதாவது வெப்பநிலை உயர்ந்து, பனி உருகத் துவங்கி விட்டது என சமீபத்தில் ஐ.நா. விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அடுத்த 50 ஆண்டுகளில் நாம் சந்திக்க இருக்கும் புதுப்புது இயற்கை பிரளயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சந்திரயான்–3ன் ஆய்வுகள் உதவும் என நம்புவோம்.