செய்திகள்

20 ஆரம்ப சுகாதார மையங்களில் நடை, யோகா, அக்குபஞ்சர் பயிற்சி அடங்கிய சுகாதார பூங்கா

Spread the love

சென்னை, மார்ச் 26–

நோயாளிகள் நலன் மேம்பட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபயிற்சி, யோகா பயிற்சி, அக்குபஞ்சர் அடங்கிய சுகாதார பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மானிய கோரிக்கை மீது 24–ந் தேதி அன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசும் போது மருத்துவ துறையில் அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். ஏராளமான மருத்துவமனைகளுக்கு பல கோடி ரூபாய் செலவில் நவீன மருத்துவ கருவிகள் வாங்கப்படும் என்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் சில வருமாறு:–

* நல் உற்பத்தி முறையில் பாம்புக் கடிக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்தினை தயாரிப்பதற்கு ஏதுவாக சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலைய நஞ்சு முறிவு துறைக்கு 57.33 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

* சென்னை ராயப்பேட்டை, எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிறுவனம், விழுப்புரம், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் லேமினார் ஏர் புளோ (Laminar Air Flow) வசதி கொண்ட நவீன அறுவை அரங்கம் 9 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும்.

* கடலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் 10.80 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

சுகாதார பூங்கா

* நோயாளிகளின் நலன் மேம்பட 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைப்பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் அக்குபிரசர் அடங்கிய சுகாதாரப் பூங்கா ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

* கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கோயம்பத்தூர், தருமபுரி, ஐ.ஆர்.டி பெருந்துரை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 20 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு எலும்பு மூட்டு நுண்துளை சிகிச்சைக் கருவி 9.25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* அதிக பிரசவங்கள் நிகழும் 30 சீமாங்க் மையங்களுக்கு கூடுதலாக, 68 மகப்பேறு மருத்துவர், 67 மயக்கவியல் மருத்துவர் மற்றும் 59 குழந்தைகள் நல மருத்துவப் பணியிடங்கள் 7.77 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* குருதி பரிமாற்றம் அதிகம் நடைபெறும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்தவமனை, ஸ்டான்லி, மதுரை, சேலம், கோயம்பத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் இரத்த வங்கிகளில் ரத்த பரிமாற்றம் மூலம் பரவும் நோய் கிருமிகளை மூலம் சோதனை செய்யும் வசதி ஹப் மற்றும் ஸ்போக் வகையில் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

மூலிகைப்பயிர்

* மூலிகை பயிர் விளைவிப்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமைக்கு 3.06 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் யுனானி மற்றும் ஆயுர்வேதா படிப்பில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு 3 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.

* 8,713 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 2,220 பகுதி சுகாதார செவிலியர்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான கடன் தொகை வழங்க அரசு ஒதுக்கீடு உயர்த்தப்படும்.

* திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு 2.66 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, முதலமைச்சரின் ஆணையின்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மைக்ரோ வாஸ்குலர் (Micro Vascular) மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு 2.66 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* செங்கல்பட்டு மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் 2.28 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் பிரிவு 2.20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

* சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த துறைக்கு என்ட்ரோஸ்கோபிக் யூனிட் கேப்சூல் (Enteroscopic Unit Capsule) கருவி 2.04 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

ரூ.1.75 கோடியில் இலவச மூக்கு கண்ணாடி

* கண் பார்வை குறைபாடு உள்ள அனைவருக்கும் 1.75 கோடி ரூபாய் செலவில் இலவசமாக மூக்கு கண் கண்ணாடி வழங்கப்படும்.

* 63 துணை மாவட்ட மருத்துவமனைகளில் பல் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை நாற்காலி மற்றும் உபகரணங்கள் 3.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்

* டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிலவேம்பு குடிநீர் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து மக்களிடையே விழிப்புணர்வு 1.45 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* சேலம், திருவள்ளூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடமாடும் கண் மருத்துவ சேவை 90 இலட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும்.

தோல் வங்கி

* தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தோல் வங்கி 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* தருமபுரி, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி, சேலம், கன்னியாக்குமரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்ட தொடக்கநிலை சிகிச்சை மையங்களில் உணர்ச்சி சிகிச்சை பூங்கா 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

* சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மயிலாடுதுறை அரசு துணை மாவட்ட மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பாலூட்டும் தாய்மார்கள் சேவை (தாய்ப்பால் வங்கிகள்) 58 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எக்ஸ்ரேவுடன் கூடிய டிஜிட்டல் மேமோகிராபி கருவி 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

முதல் உதவி பயிற்சி

* முதலமைச்சரின் ஆணையின்படி, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், போக்குவரத்து பணியில் உள்ள காவலர்கள் உட்பட 2700 காவலர்கள், நெடுஞ்சாலைப் பாதுகாப்பு பணியில் உள்ள 500 காவலர்கள், தீயணைப்புத் துறையில் 500 நபர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் உள்ள 300 மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் உரிய முகமைகள் வழியாக முதல் உதவி பொறுப்பாளர் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *