செய்திகள்

20வது பட்டமளிப்பு விழா: காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2,091 மாணவ மாணவியர்களுக்கு பட்டம்

Spread the love

கோவை, ஜூலை 10

காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2091 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.

கோவை காருண்யா தொழில்நுட்பம் ம்றறும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 20வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டிஜிஎஸ் தினகரன் கலையரங்கில் நடைபெற்றது.

துணைவேந்தர் மன்னார் ஜவஹர் வரவேற்றார். கேரள மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேரூரை நிகழ்த்தினார்.

பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தலைமை தாங்கி பிடெக், பிபிஏ, பிசிஏ, பிகாம், பிஎஸ்சி எம்டெக், எம்பிஏ, எம்எஸ்சி, எம்ஏ, எம்பில் மற்றும் முனைவர் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 2091 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி, எல்லா நலமும், வளமும் பெற்று, மனித சமுதாயத்தில் இறைவனின் ஆசியோடு வாழ பிரார்த்தனை செய்தார்.

கவுரவ டாக்டர் பட்டம்

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதியுமான என்.பால் வசந்தகுமார் மற்றும் ரயான் சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குனரான கிரேஸ் பிண்டோ ஆகியோரின் சேவைகளை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 127 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளும் வழங்கப்பட்டது. முதுகலை பொறியியல் துறையின் (எம்டெக்) சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசி, இளங்கலை பொறியியல் (பி.டெக்) துறையில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடமியா சுக்லா, இளங்கலை (கலை) துறையில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெசிந்தா ஆகியோருக்கு வேந்தர் விருதுகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவி

பட்டம் பெற்ற மாணவ மாணவியர், சீஷா தொண்டு நிறுவனம் மூலம், தங்களின் சமுதாய பற்றினை பறைசாற்றும் வண்ணம் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 ஸ்கூட்டர்கள், 5 சக்கர நாற்காலிகள், கண்பார்வையற்றவர்களுக்கு 10 டிவிடிக்கள், 6 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள், 5 தையல் யந்திரங்கள் மற்றும் பல உபகரணங்களை வழங்கினர்.

விழாவில், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், காருண்யா அறங்காவலர் சாமுவேல் பால், இணை துணைவேந்தர்கள் ரெட்லிங் மார்கரேட் வாலர், இ.ஜே.ஜேம்ஸ், பதிவாளர் எலைஜா பிளசிங், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண் டி.பிரிட்டோ மற்றும் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *