செய்திகள்

இருமொழி கொள்கை தான் தமிழகத்தின் உயிர் மூச்சு

மொழி திணிப்பை ஏற்கமாட்டோம்

இருமொழி கொள்கை தான் தமிழகத்தின் உயிர் மூச்சு

செயற்குழுவில் உறுதி

சென்னை, செப்.28–

தமிழகத்தில் என்றென்றைக்கும் இருமொழி கொள்கை தான் உயிர்மூச்சு என்று உறுதிபட அண்ணா தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:–

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்ற உயர்ந்த மனிதாபிமான சிந்தனையும், சகோதரத்துவ உணர்வும், உலகப் பார்வையும் கொண்ட பண்பாடு தமிழர் பண்பாடு. எல்லோரையும் உற்றார் உறவினராகப் போற்றி, அனைவரிடத்தும் அன்பு பாராட்டி, அறவழிப்பட்ட வாழ்க்கை முறையை பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். அன்னைத் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று, அதன் இலக்கியச் சுவையையும், அதுகூறும் அறஉணர்வுகளையும் கற்றறிதல் வேண்டும். உலகெங்கும் சென்று உறவாட ஆங்கிலம் என்னும் இணைப்பு மொழியையும் படித்திடல் வேண்டும் என்ற இருமொழிக் கொள்கை திராவிட இயக்கப் பேராசான் பேரறிஞர் அண்ணா நமக்குக் காட்டிச் சென்ற லட்சிய வழியாகும்.

இருமொழிக் கொள்கை ஆய்ந்து, அறிந்து மேற்கொள்ளப்பட்ட அறிவு வழிக் கொள்கை. வெறுப்பால் உருவான கொள்கையல்ல. மாறாக, அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் உருவான கொள்கை என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் விளக்கி உள்ளார்.

ஒருமொழி பேசப்படாத சூழலில் வாழும் மாணவச் செல்வங்கள் அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானது என்பதை பல்வேறு ஆய்வுகள் வழியாக நாம் அறியலாம். அதிலும் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி பயிலும் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியர், தங்கள் வாழ்க்கைச் சூழலில், வழக்கத்தில் இல்லாத மொழியைப் புதிதாகப் படிப்பதென்பது அவர்களுடைய சுமையைப் பலமடங்கு அதிகரிக்கும். கூடுதலாக ஒரு மொழியை ஒருவர் தெரிந்துகொள்வதால், அவர் அந்தமொழி தெரியாதவரை விட அறிவில் சிறந்தவர் என்பதை யாரும் ஏற்க முடியாது.

பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் இன்றைய தேவைகளுக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் இன்றியமையாத பாடத் திட்டங்களைப் பயில்கின்றனர். இந்த பாடத் திட்டங்களில் மாணாக்கர்கள் தங்கள் மனதைச் செலுத்தி, மனச் சுமை இன்றி கற்றலின் இனிமையை உணர்ந்து படித்தல் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இருமொழி கொள்கையில் உறுதி

பள்ளிக்கு வெளியே பேசி, பழக வாய்ப்பில்லாத ஒருமொழியைக் கூடுதலாகப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மாணாக்கர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும். ஏற்கனவே உலக இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைப் பயில வேண்டிய இன்றியமையாதக் கடமை மாணாக்கர்களுக்கு இருக்கிறது. இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் அறிவுசார் தொழில்களில் முதன்மை பெற்றிருப்பதற்கு அவர்கள் பெற்ற ஆங்கிலக் கல்வி அடிப்படையாகத் திகழ்வதை யாரும் மறுக்க முடியுமா?

எனவே, இருமொழிக் கொள்கை (தாய்மொழியாம் தமிழ் மொழியும், ஆங்கிலமும்) நடைமுறையில் இருப்பதுவே சாலச் சிறந்தது. இருமொழிக் கொள்கையில் தமிழ் நாடு என்றைக்கும் உறுதியாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.

தமிழ் மக்கள், தங்கள் மீது ஒரு மாற்றுமொழி திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அனைத்து மொழிகளையும் மதிக்கும் தமிழ் நாடு என்றென்றைக்கும் இருமொழிக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் என்பதை இச்செயற்குழு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *