போஸ்டர் செய்தி

2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி தொகையில் 50% நிதியை வழங்குங்கள்: மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் மனு

 

சென்னை, பிப்.11-
118.9 கிலோ மீட்டர் தொலைவிலான அடுத்த கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிக்கான தொகையில் 50 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் மனு அளித்தார்.
திருப்பூர் வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் முதற்கட்ட பணிக்காக மத்திய அரசும், தமிழக அரசும் தலா 50 சதவீத நிதியை தருவதாக ஒத்துக்கொண்டு அதன்படி பணிகள் நிறைவு பெற்று 2015–ம் ஆண்டு முதல் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.
2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மெட்ரோ ரெயில் கொள்கையை தொடர்ந்து 118.9 கிலோ மீட்டர் தொலைவிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணியை மேம்படுத்தப்பட்ட திட்டங்களுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு புதிய திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை போன்று 2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கும் தமிழக அரசும், மத்திய அரசும் தலா 50 சதவீத நிதியை ஒதுக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.
இந்த திட்டத்துக்கான மொத்த செலவு தொகையான 69 ஆயிரத்து 180 கோடி ரூபாயில் நிலத்துக்கான மதிப்பு, மாநில வரி ஆகியவை மட்டும் 13 ஆயிரத்து 723 கோடி ரூபாய் ஆகும். மீதமுள்ள 55 ஆயிரத்து 457 கோடி ரூபாயை பொறுத்தமட்டில் தமிழக அரசும், மத்திய அரசும் தலா 20 சதவீதத்தையும், 60 சதவீதத்தை நிதி முகமையும் அளிக்க வேண்டியது உள்ளது.
இதன்படி, இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கும். இந்த திட்டத்துக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டு முகமை 20 ஆயிரத்து 196 கோடி ரூபாய் அளிக்க ஒத்துக்கொண்டுள்ளது.
உலக வங்கி போன்ற பல்வேறு நிதி அமைப்புகளிடம் இருந்து 10 ஆயிரத்து 351 கோடி ரூபாய் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு தமிழக அரசு வழங்கும் நிலத்துக்கான தொகை, மாநில வரி ஆகியவற்றை தவிர்த்து மீதமுள்ள தொகையில் 50 சதவீத தொகையை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *