செய்திகள்

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: முல்லைத்தோட்டம் – கரையான்சாவடி மேம்பாலப் பணி நிறைவு

Makkal Kural Official

சென்னை, மார்ச் 3–

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் -– பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் முல்லைத்தோட்டம் –- கரையான்சாவடி இடையே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் -– பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித் தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.

18 உயர்மட்ட

ரெயில் நிலையம்

9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை, உயர்மட்டப் பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. குறிப்பாக, பூந்தமல்லி -– போரூர் இடையே பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணி ஆகியவை முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், 4-வது வழித் தடத்தில் முல்லைத்தோட்டம் –- கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப்பணிகள் நேற்று நிறைவடைந்து, முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் எஸ்.அசோக்குமார் (உயர்த்தப்பட்ட வழித்தடம்), ஏ.ஆர்.ராஜேந்திரன் (மெட்ரோ ரயில்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத் தோட்டம் நிலையத்துக்கு ஒரு மோட்டார் டிராலி கொண்டு செல்லப்பட்டு, அங்கு கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்துக்கான தொடக்க முனையாக நியமிக்கப்பட்ட தூண் எண்ணை (424) அடைந்தது. கிரேடு செப்பரேட்டர் என்பது ஒரு சந்திப்பில், வெவ்வேறு உயரங்களில், பல்வேறு வகையான போக்குவரத்தை பிரிக்கும் கட்டிட பணியாகும். போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்ப்பதும் பாதுகாப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

இது தவிர, மேல்நிலை உபகரணப் பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் ரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போரூர் – பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழித் தடத்தை இந்த ஆண்டின் இறுதியில் பயணிகள் சேவைக்காக திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *