செய்திகள்

2 மாதத்தில் 4 வது முறையாக விபத்துக்குள்ளான வந்தே பாரத்

காந்தி நகர், டிச. 2–

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை வந்தே பாரத் விரைவு ரயில் இரண்டு மாதத்தில் 4 வது முறையாக மீண்டும் மாடு மோதியதால் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்தியாவில் ரயில்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கத்திலும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் வகையில், இந்திய அரசு சார்பில் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை-மைசூர் உள்பட நாட்டில் 5 வழித்தங்களில் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

மாடு மோதி விபத்து

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை காந்திநகரில் நகரில் இருந்து மும்பை புறப்பட்ட வந்தே பாரத் ரயில், குஜராத் மாநிலம் உத்வாதா – வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்த போது மாலை 6.23 மணியளவில் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது.

இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் இயக்குவதில் சிரமம் எதுவுமில்லை என்ற நிலையில், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பிறகு, மாலை 6.35 மணிக்கு மீண்டும் ரயில் புறப்பட்டது. கடந்த முறை நடந்த இதுபோன்ற விபத்துகளால் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்ததை அடுத்து அது மாற்றப்பட்டது. இதே மார்க்கத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி இரண்டு மாதங்களே ஆன நிலையில், 4 ஆவது முறையாக விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *