டெல்லி, பிப். 27–
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மார்ச் 2-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைய உள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20-நிறைவடைய உள்ளது. தற்போது உத்தரபிரதேசத்தில் நடைபெறும் இந்த நடைபயணமானது, மார்ச் 2-ம் தேதி, மொரீனா மாவட்டத்தில் உள்ள பிப்ராய் என்ற இடத்திலிருந்து மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைகிறது. அப்போது ராகுல் சாலைப் பேரணி நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜீவ் சிங் தெரிவித்தார்.
பழங்குடியினருடன் பேச்சு
மார்ச் 3ஆம் தேதி, குவாலியரில் இருந்து ராகுல் காந்தியின் நடைப்பயணம் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களைக் கடந்து சிவ்புரியை அடையும். சிவ்புரி செல்லும் வழியில், காந்தி மொஹெதாவில் பழங்குடியினர்களுடன் ராகுல் உரையாற்றுவார்.
மார்ச் 4ஆம் தேதி, குணா மாவட்டத்தில் உள்ள மியானாவிலிருந்து நடைப்பயணம் மீண்டும் தொடங்கி பல்வேறு கிராமங்களைக் கடந்து ரகோகரை அடையும். மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்து, மார்ச் 5-ம் தேதி உஜ்ஜையினியில் நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார் என்று ராஜீவ் சிங் கூறினார்.