செய்திகள்

2 நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்: கேரள சட்டசபையில் பரபரப்பு

திருவனந்தபுரம், ஜன. 25–

கேரள சட்டசபை கூட்டத் தொடரில் 2 நிமிடத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள அரசுக்கும் கேரள கவர்னராக உள்ள ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள மாநில அரசை பொதுவெளியில் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி கவர்னருக்கு எதிராக கேரளா அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கிடையே இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்குவது வழக்கம். அதன்படி இன்று காலை கவர்னர் ஆரிப் முகமது கான், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை துவங்கினார். 62 பக்கம் கொண்ட கொள்கை உரையின் 136 பத்திகளில் நேரடியாக கடைசி பக்கத்தை திருப்பிய கவர்னர், ”இப்போது கடைசி பத்தியை படிக்கிறேன்” எனக் கூறி அதை மட்டும் வாசித்துவிட்டு உரையை முடித்து அமர்ந்தார்.

அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது; அது முடிந்ததும், கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்த முழு காட்சிகளும் 5 நிமிடங்களுக்குள் நடந்தது. அதிலும் சரியாக 9:02 மணிக்கு உரையை துவக்கிய கவர்னர் ஆரிப் முகமது கான், 9:04க்கு உரையை முடித்தார். வெறும் இரண்டே நிமிடத்தில் கவர்னர் உரையை முடித்ததால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் விருந்து அளிக்க இருக்கிறார். இதில் ஆளுங்கட்சி சார்பில் தலைவர்கள் பங்கேற்பார்களா? என்பது தெரியவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *