செய்திகள்

2 நாள் நடந்த சோதனையில் 2,512 ரவுடிகள் கைது

5 துப்பாக்கி, 934 அரிவாள் பறிமுதல்

சென்னை, செப். 25–

தமிழ்நாடு முழுவதும், போலீசார் 2 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில், 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் குற்றச்செயல்களை அடியோடு ஒழிக்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ரவுடி ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரது உத்தரவின்பேரில், மண்டல ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார்(வடக்கு), சுதாகர்(மேற்கு), பாலகிருஷ்ணன்(மத்திய), அன்பு(தெற்கு) மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட மாநகர போலீஸ் கமிஷனர்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரது தலைமையில் தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

2,512 ரவுடிகள் கைது

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த அதிரடி ரெய்டில் 48 மணி நேரத்தில், மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 5 துப்பாக்கிகள், 934 அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் போலீஸ் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட 1,927 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கிவிட்டு அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த அதிரடி சோதனையை, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *