செய்திகள்

2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்த மோடி

Makkal Kural Official

மொரிசீயஸ், மார்ச் 11–

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மொரீசியஸ் சென்றடைந்துள்ளார்.

மொரீஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க 2 நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று மொரீஷியஸ் புறப்பட்டார்.

இது தொடர்பாக மோடி வெளிட்ட அறிக்கையில், “எனது நண்பர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

மொரீஷியஸ் ஒரு நெருங்கிய கடல்சார் அண்டை நாடு. இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய கூட்டாளி மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நுழைவாயில் ஆகும். நாம் வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டுள்ளோம். ஆழமான பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயகத்தின் மாண்புகளில் பகிரப்பட்ட நம்பிக்கை, நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல் ஆகியவை நமது பலங்களாகும்.

நெருங்கிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்களிடையேயான தொடர்பு என்பது பகிரப்பட்ட பெருமைக்கு ஆதாரமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் மூலம் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

நமது தொலைநோக்கு சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக, நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான நமது நீடித்த நட்புறவை வலுப்படுத்தவும், நமது கூட்டாண்மையை அதன் அனைத்து அம்சங்களிலும் உயர்த்தவும், நமது நீடித்த நட்புறவை வலுப்படுத்தவும் மொரீஷியஸ் தலைமையுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

இந்தப் பயணம் கடந்த காலத்தின் அடித்தளத்தின் மீது அமைந்து, இந்தியா மற்றும் மொரீஷியஸ் உறவுகளில் புதிய மற்றும் பிரகாசமான அத்தியாயத்தைத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் வரவேற்றார். மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டதில் பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு, இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். மேலும் இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *