சென்னை, பிப்.19–
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 நாள்களில் செய்தி வெளியாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்த முறை தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை முடித்து இன்று காலை சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், இரண்டு நாள்களில் நல்ல செய்தியுடன் சந்திப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின் போது கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.