சென்னை, பிப்.22
கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் பேரணியை (டெல்லி சலோ) 2 நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், கடந்த 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டெல்லி சலோ’ எனப்படும் டெல்லியை நோக்கி என்ற பேரணியை துவக்கினர். இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில், பஞ்சாப் – அரியானா எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரியானாவுக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி, கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் – அரியானா எல்லையிலேயே விவசாயிகள் முகாமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று போராட்டத்தை தீவிரபடுத்திய விவசாயிகள், ஜேசிபி யந்திரங்கள், 1,200 டிராக்டர்கள் டெல்லியை நோக்கி புறப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு, போலீசார் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறு விமானம் வாயிலாக கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் 23 வயதான சுபாகரன் சிங் உயிரிழந்தார்.
அதேவேளை, போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை 4 கட்டங்களாக நடந்ததில் உடன்பாடு ஏற்படாததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பேரணியை 2 நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். நாளை மாலை போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று அளித்தப் பேட்டியில், “அரியானா மாவட்டம் ஷம்பு எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு 2 நாட்களுக்கு டெல்லி சலோ போராட்டத்தை நிறுத்திவைப்பதாக முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை. துணை ராணுவப் படையினரைக் கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாங்கள் ஏற்கெனவே எங்களது டெல்லி சலோ பேரணி அமைதி வழியில் தான் நடைபெறும் என்று உறுதிபடச் சொல்லியிருந்தோம். ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் இளைஞர்கள் முன்னேற வேண்டாம் தலைவர்கள் மட்டும் டெல்லி நோக்கிச் செல்வோம் என்று கூறியிருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தையில் இருந்து மத்திய அரசு தரப்பினர் ஓடிவிட்டனர். அப்போது தான் எங்களுக்கு அந்தத் துயரச் செய்தி வந்தது. ஷம்பு எல்லையில் 23 வயதான சுபாகரன் சிங் தலையில் குண்டடிபட்டு இறந்தார் என்று தெரிந்தது. மேலும் 3 பேர் படுகாயமடைந்ததையும் அறிந்தோம்.
இந்தச் சூழலில் இரண்டு நாட்கள் டெல்லி சலோ போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். இப்போதைக்கு இங்கேயே (ஹரியாணாவில்) போராட்டம் நடைபெறும். நிலவரத்தை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முடிவெடுப்போம். ஏனெனில் மிகுந்த வேதனைக்குரிய சம்பவங்கள் பல நடந்துவிட்டன.
பேரணியில் வெறும் கைகளோடு நடந்து சென்ற விவசாயிகள் மீது ரப்பர் புல்லட்டுகள் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு விவசாயியை சாக்கில் கட்டி அவரது கால்களை உடைத்து வயல்வெளியில் வீசியுள்ளனர். விவசாயிகளின் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சேதப்படுத்தியுள்ளனர். நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். எங்கள் மீதான இந்த வன்முறையை ஒட்டுமொத்த நாடும், ஏன் இந்த உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் போக்கு மிகவும் தவறானது.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பது மிகவும் முக்கியமான விஷயம். இதில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தென் இந்தியா என அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.