செய்திகள்

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வு: வேலூர் சி.எம்.சி.க்கு அனுமதி

புதுடெல்லி, ஆக. 11–

கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன.

முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அந்தவகையில், இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஏற்படும் பயன்கள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அயோக்கின் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *