செய்திகள்

2 குழந்தைகள் கொண்ட குடும்பம் கிராமத்திற்கு சென்றால் ரூ.19 லட்சம்

புதுமை திட்டத்தை அறிவித்த ஜப்பான் அரசு

டோக்கியோ, ஜன. 4–

ஜப்பானில் நகர்புறத்திலிருந்து கிராமப் பகுதிக்கு வாழச் சென்றால் ஒரு குழந்தை உள்ள குடும்பத்திற்கு ரூ.6.33 லட்சம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது முன்னேறிய நாடாக ஜப்பான் உள்ளது. எனினும், மக்கள் தொகையில் அந்த நாடு பின்தங்கியுள்ளது. ஜப்பானில் மக்கள் தொகையில் தற்போது பெரும்பாலானோர் முதியவர்களாக உள்ளனர்.

வேலை செய்யும் வயதில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் அந்நாடு கடும் சிக்கலில் தவிக்கக்கூடும். ஜப்பானின் மக்கள் தொகையும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே செல்கிறது. அந்நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.

குடும்பங்களுக்கு மானியம்

இந்த நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் (சுமார் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம்) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் (சுமார் ரூ. 49 ஆயிரம்) உயர்த்தி 5 லட்சம் யென் (சுமார் ரூ.3 லட்சம்) போன்ற அறிவிப்புகளை ஜப்பான் அரசு கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் வெளியிட்டது.

இந்நிலையில், நாட்டின் கிராமப்புறங்களில் மக்கள் தொகையை அதிகரிக்க அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டோக்கியோ நகரிலிருந்து கிராமப் புறத்திற்கு வாழ சென்றால், ஒரு குழந்தை வைத்திருப்பவர்களுக்கு 1 மில்லியன் யென் (ரூ.6,33,000) வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு கிராமத்திற்கு சென்றால் 3 மில்லியன் யென் (சுமார் ரூ.19 லட்சம்) பெறலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *