சென்னை, மே 23–
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் இல்லை
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் இன்று முதல் அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால் வங்கிகளில் சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும். இதற்காக செப்டம்பர் 30ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். அடையாள அட்டைகளை காண்பித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் வழங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றினார்கள்.
வங்கிகளில் சிறப்பு ஏற்பாடாக தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசையும் அமைத்து கொடுத்து இருந்தனர். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி செய்து, அவர்கள் காத்திருக்காமல் பணத்தை மாற்றி கொடுத்தனர்.2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.
தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமலும், அவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.
பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.
பெட்ரோல் பங்குகளில்
புழக்கம் அதிகம்
நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சல் தெரிவித்தார். ரூ.100 மற்றும் ரூ.200க்கும் பெட்ரோலை நிரப்பிவிட்டு வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளைத் தருவதாகவும், இதனால் சில்லறை நோட்டுகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.