செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 402 விமானங்கள் இயக்கம்

பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஏப்.5-

கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 402 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தன. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 500 விமான சேவைகள் இயக்கப்பட்டு சாதனை படைத்தது. மும்பை, டெல்லி விமான நிலையங்களை அடுத்து சென்னை விமான நிலையமும் சாதனை பட்டியலில் இணைந்தது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து சென்னை விமான நிலையம் கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக பல நாட்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தன.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. தமிழ்நாட்டிலும் மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வெகுவாக விலக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தற்போது விமான பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிக அளவில் அதிகரித்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு முன் 398 உள்நாட்டு விமானங்கள், 116 பன்னாட்டு விமானங்கள் என 514 விமானங்கள் இயக்கப்பட்டன. அதைபோல் நாளொன்றுக்கு 38 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் 8 ஆயிரம் பன்னாட்டு பயணிகள் என 46 ஆயிரம் பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு 37 புறப்பாடு விமானங்கள், 37 வருகை விமானங்கள், நாளொன்றுக்கு 74 பன்னாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் 328 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் தற்போது 402 விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளை விட தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் 328 விமானங்களில் சுமார் 40 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும், 74 பன்னாட்டு விமானங்களில் சுமார் 11 ஆயிரம் வருகை, புறப்பாடு பயணிகளும் என 51 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்த ஏப்ரல் மாத இறுதில் இருந்து மேலும் பல பன்னாட்டு விமானங்களும், உள்நாட்டு விமானங்களும் புதிதாக இயக்கப்பட உள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.