செய்திகள்

2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது: காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம்

Makkal Kural Official

மேட்டூர், ஆக. 12–

இந்த ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி மாலை மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியதுடன் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் கடந்த 7ந் தேதி முதல் அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அணை நிரம்பியதால் ஏற்கனவே மூடப்பட்ட மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டது. உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேட்டூர் அணையில் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் உடனுக்குடன் உபரி நீர் போக்கி மதகுகளை உயர்த்தி தண்ணீரை திறக்க தயார் நிலையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக அணைகளான கே.எஸ்.ஆர். அணையிலிருந்து 36,308 கனஅடியும், கபினி அணையிலிருந்து 5000 கனஅடியும் என மொத்தம் காவிரியில் 41,308 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *