புதுடெல்லி, டிச. 2–
நாடாளுமன்ற 2ம் நாள் கூட்டத்தொடரில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், புதிய தொழிலாளர் சட்டங்கள், எஸ்.ஐ.ஆர்., விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் முதல் நாளே சபையை முடக்கினர்.
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூடியதும் எஸ்ஐஆர் பணி குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா மறுப்பு தெரிவித்ததால், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரியும் எஸ்ஐஆருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பகல் 12 மணிக்கும் அமளி தொடர்ந்ததால், அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அதேபோல் ராஜ்யசபாவை இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.நாராதாகிருஷ்ணன் நடத்தினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
![]()





