செய்திகள் நாடும் நடப்பும்

1979–ல் மோர்பி கண்ட மரண ஓலங்கள், 2022ல் தொடரும் அவலம்


ஆர். முத்துக்குமார்


மோர்பி என்றாலே தண்ணீரில் கண்டம் என்று ஆகிவிட்டது. சமீபத்தில் குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விட்டதில் 141 பேர் இறந்து விட்டனர் அல்லவா? இதே நகரில் 1970–ல் மழை வெள்ளம் காரணமாக பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அது இயற்கையின் சீற்ற அழிவு, ஆனால் தொங்கு பாலம் இடிந்து விழுந்தது முற்றிலும் தில்லுமுல்லு பேர்வழிகளின் பேராசை தான்.

அஜந்தா கடிகாரங்கள், பிற மின் பொருட்களையும் தயாரிக்கும் ‘ஒரேவா’ குழுமத்திடம் இந்த தொங்கு பாலத்தை சீர் செய்து 15 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தம் தரப்பட்டு அது அமுலுக்கு வந்துவிட்ட மறுநாளே இக்கோர விபத்து நடந்து இருக்கிறது.

100 பேர் மட்டும் தான் இந்தத் தொங்கு பாலத்தில் ஒரே சமயத்தில் நடந்து செல்ல வேண்டிய கொள்ளளவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 1880–ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாகும். அதில் உபயோகிகப்பட்ட எல்லா பொருட்களுமே இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அன்று ஆன செலவோ ரூ.3.5 லட்சம் என்று அங்குள்ள அரசு குறிப்பீடுகள் கூறுகிறது.

இந்த 142 வருட பழமையான தொங்குபாலம் 765 அடி நிலத்தில் உள்ளது.

அப்பகுதியில் மிக எழில்மிகு சுற்றுலாத் தலமாக இருக்கும் இந்தத் தொங்கு பாலத்தை மீண்டும் புனரமைத்தால் நல்லது என முடிவெடுத்து அதை இது போன்ற கட்டுமானத்தில் முன் அனுபவமே இல்லாத ‘ஓரிவா’ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதை அக்டோபர் 26 அன்று தான் பூர்த்தி செய்து எந்த முன்னறிவிப்புமின்றி அரசு அனுமதிகளும் உரிய வகையில் பெறாமல் திறந்துவிடப்பட்டுள்ளது.

அந்த பணிகளுக்கு ‘ஓரிவா’ ரூ.2 கோடி செலவு செய்தும் இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீண்டும் திறக்கப்பட்ட இந்த தொங்கு பாலத்தில் நடை செல்ல சிறுவர்களுடன் பெற்றோர் மற்றும் நண்பர்கள் படையெடுத்து வந்துள்ளனர்.

பெரியவர்களுக்கு ரூ.17 சிறுவர்களுக்கு ரூ.12 பெறப்பட்டே அதில் நடந்து ரசிக்க அனுமதித்தும் இருக்கிறார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாக வர, கல்லாப் பெட்டிகள் நிறைய, ஒரே நேரத்தில் இத்தனை பேர் இருந்தால் பாலம் தாங்குமா? என்ற அக்கறையின்றி அனுபவித்துக் கொண்டே இருந்துள்ளனர்.

மாலை 6.30 மணி அளவில் சுமார் 500 பேர் அதிலிருக்க, சில இளைஞர்கள் குதித்தும் ஊசலில் ஆடுவது போல் ஆடியும் மகிழ்ந்து கொண்டு இருந்ததால் எடை தாங்க முடியாது பாலம் உடைந்து விட்டது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தவர்களுக்கு அடியில் ஓடிக்கொண்டு இருந்த நதியே ‘ஜலசமாதி’ ஆக மாறிவிட்டது. இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.

உலகமே அதிர்ந்து போய் இப்படி ஒரு விபத்தா? என கண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் தன் நாட்டு பிரச்சினைகளில் மூழ்கி இருந்தாலும் இவ்விபத்தில் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

நாங்கள் ரூ.2 கோடியில் மிக நேர்த்தியாக சீரமைத்து தந்து விட்டோம் என்கிறது ‘ஓரிவா’ குழுமம். அதிகாரிகள் 500 பேரை அனுமதித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறது.

மாநகராட்சி அதிகாரிகளோ, இதை ஏன் எங்களிடம் அனுமதி வாங்காமல் செயல்பாட்டுக்கு சென்றது என கேட்டுள்ளது!

எது எப்படியோ ஒரு பாரதீய ஜனதா எம்.பி.யின் அண்ணன் குடும்பத்தார் 12 பேர் பலியாகிவிட்டனர். மேலும் ஒரு குடும்பத்தில் 7 பேர் மரித்துவிட்டனர்.

ஒரு கணவன், தன் சிறு குழந்தையை காணோம் எனப் பதறி, முங்கு நீச்சல் போட்டு தேடிய மனைவி சகதியில் சிக்கி அவர் கண்முன் இறந்து விட்டதைப் படிக்கும்போது நம் இதயம் கணக்கிறது. கண்ணீர் பெருக்கெடுத்து வழிய செய்வது அறியாது தவிக்கிறோம்.

இது இன்றைய நவீன காலத் தொழில்நுட்பங்கள் பல நல்லவற்றை செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்

இப்படிப்பட்ட சோகம் அரங்கேறி இருப்பது பெரும் குற்றமாகும்.

43 ஆண்டுகளுக்கு முன்பு 1979ல் ஆகஸ்ட் 11–ம் நாள் இந்த மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் 30 அடிக்கும்மேல் வரை நீரில் மூழ்கி விட்டதாம்!

அந்த நாளில் பெரிய மழை பெய்து கொண்டிருக்க ஊர்மக்கள் தண்ணீர் வரத்து அதிகரிக்க இந்தத் தொடர் மழை என நினைத்து வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர்.

தொலைத்தொடர்பு அக்காலத்தில் வானொலி மட்டுமே. அதில் வேறு அபாய எச்சரிக்கை ஏதும் வராததால் வீட்டில் பதுங்கி இருந்தனராம்.

மச்சு ஆற்றில் இரண்டு அணைகள் உண்டாம். அதில் நீர்வரத்து கொள்ளளவை தொட்டு விட்ட பிறகும் மழை நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருந்ததால் அணைக் கதவை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இரண்டாவது அணைக் கதவு ஏதோ கோளாறு காரணமாக திறக்காது போக தண்ணீர் மடை திறந்த வெள்ளமாய், காட்டாற்று வேகத்தில் கதவுகளுக்கு அருகே உடைப்பை ஏற்படுத்தி பல திசைகளில் பீச்சி பாய்ந்து ஓட, அங்கு பணியில் இருந்தவர்கள் முதல், குடியிருப்பு பகுதி வாழ் மக்கள் வரை அனைவரையும் பலி கொண்டுவிட்டது.

மதியம் ஏற்பட்ட இந்த விபத்து பற்றி தெரிவிக்க வழியின்றி போனதால் அணையிலிருந்த தண்ணீர் அடுத்த 20 நிமிடங்களில் மோர்பி நகரை ஜலசமாதி ஆக்கிவிட்டது!

மாலை 3.30 மணி அளவில் அப்பகுதி 30 அடி நீரில் மூழ்கிய செய்தி பல மணி நேரங்களுக்குப் பிறகு தான் மத்திய அரசுக்கும், பிறருக்கும் தெரிய வந்துள்ளது.

உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அடுத்த 15 மணி நேரத்திற்கு பிறகே இது வெள்ளப்பெருக்கு என்பது தெரியவருகிறது. அதுவரை இது அதீத மழை என்றே அறிவித்துள்ளது.

மறுநாள் தான் வானொலியில் தெளிவாக நடந்த கோரத்தை தெரிவித்துள்ளது. அங்குள்ள அன்றைய தந்தி இணைப்புகள் அடித்து வந்த வெள்ளப்பெருக்கில் அறுந்து பறந்து இருக்க தொலைபேசிகள் ஏதும் செயல்படாது போக யாரிடம் எப்படி தகவல்களை கொடுக்க முடியும்?

ஒரு வழியாக ராணுவமும் பிற அவசர உதவி அமைப்புகளும் வந்து சேர ஒரு வார கால தாமத்தை அன்று ‘விரைந்து வந்துள்ளனர்’ என்றே வர்ணித்து இருக்கிறார்கள்.

வந்தவர்கள் கண்ட காட்சியே 150 மணி நேரமாக நீரில் மூழ்கி இருந்த பிணங்களின் நிலைமையும் துர்நாற்றத்தையும் மட்டுமே.

அன்று தொழில்நுட்ப கோளாறு மற்றும் நம்மிடம் வசப்படாத நவீனங்கள் காரணமாக அப்படி ஒரு சோகத்தை கண்ட மோர்பி முடங்கியது.

இன்றோ அதிநவீன கருவிகள், வீடியோ காட்சிகள், தொலை தொடர்பு வசதிகள் அனைத்தும் இருந்தும் மனிதனின் பேராசையே மீண்டும் ஒரு சோகத்தை மோர்பி கண்டுள்ளது.

நாட்டின் அனைத்து தொங்கு பாலங்களையும் மூடி சோதனைகள் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதை ஓரிவா போன்ற கத்துக்குட்டி நிறுவனங்களிடம் தரக்கூடாது என நினைத்து நாடே அஞ்சுகிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *