செய்திகள்

சென்னையில் நேற்று 194 பேருக்கு கொரோனா

சென்னை, ஜன.13–

சென்னையில் நேற்று புதிதாக 194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 416 ஆண்கள், 255 பெண்கள் என மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 194 பேரும், கோவையில் 59 பேரும், செங்கல்பட்டில் 42 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தென்காசியில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சியில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 217 ஆண்களும், 3 லட்சத்து 27 ஆயிரத்து 363 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 712 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 868 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 8 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,236 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 827 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 8 ஆயிரத்து 571 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 6 ஆயிரத்து 807 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *