செய்திகள்

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தோனேசியாவின் இடத்தை பிடித்த இந்தியா

பதக்கப்பட்டியலில் இடம்பெற்ற 41 நாடுகள்; 4 நாடுகள் மட்டுமே பதக்கம் பெறவில்லை

ஹாங்சோ, அக். 09–

45 நாடுகள் பங்கேற்ற 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 4 இடங்கள் முன்னேறிய நிலையில் (2018 இல் 8 வது இடம்), 2018 இல் 4 வது இடத்தில் இருந்த இந்தோனேசியா 9 இடங்கள் பின்தங்கி 13 வது இடத்திற்கு பின் தங்கிவிட்டது.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பில் மொத்தம் 655 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். செப்டம்பர் 23 ந்தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்று நேற்றோடு நிறைவடைந்தது. 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டில் பங்கேற்ற 46 நாடுகளில் 37 நாடுகள் மட்டுமே பதக்கம் பெற்றது. இலங்கை, வங்கதேசம், ஓமன் உள்ளிட்ட 9 நாடுகள் பதக்கம் பெறவில்லை. இந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற 45 நாடுகளில் இந்தாண்டு 41 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பூட்டான், மாலத்தீவு, கிழக்கு தைமூர், ஏமன் ஆகிய 4 நாடுகள் மட்டுமே எந்த பதக்கத்தையும் பெறவில்லை.

இந்தியா 4 இடங்கள் முன்னேற்றம்

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களை மட்டுமே பெற்று 8 வது இடத்தில் இருந்தது. ஆனால், நடப்பு 19 வது போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களுடன் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளை 2018 ஆம் ஆண்டில் இந்தோனேசியா 31 தங்கம், 24 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்கள் பெற்று 4 வது இடத்தில் இருந்த நிலையில், தற்போதைய போட்டியில் இந்தோனேசியா 7 தங்கம், 11 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை மட்டுமே வென்று 9 இடங்கள் பின்தங்கி 13 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அண்டை நாடுகளின் நிலை

2018 ஆம் ஆண்டு போட்டியில் பாகிஸ்தான் வெறுமனே 4 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்று 34 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 2 வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே பெற்று 35 வது இடத்திலும் இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ஆப்கானிஸ்தான் 1 வெள்ளி 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் பெற்று 30 வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களுடன் 31 வது இடத்தை பெற்று, ஆப்கானிஸ்தானை விட பின்தங்கியுள்ளது.

2018 ஆம் ஆண்டு இலங்கை ஒரு பதக்கம் கூட பெறாத நிலையில், நடப்பாண்டு 1 தங்கம் 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 26 வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல வங்கதேசம் 2018 இல் பதக்கமே பெறாத நிலையில் நடப்பாண்டு 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 37 வது இடத்தை பெற்றுள்ளது. மற்றபடி, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் போலவே, நடப்பு போட்டியிலும் முதல் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆனால், 2018 இல் சீனா 132 தங்கத்துடன் 289 பதக்கங்களை மட்டுமே பெற்ற நிலையில் நடப்பாண்டு 201 தங்கத்துடன் 383 பதக்கங்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, 2018 இல் 75 தங்கத்துடன் 205 பதக்கங்களை பெற்ற ஜப்பான், நடப்பாண்டு 52 தங்கத்துடன் 188 பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது. மற்றபடி, மலேசியா, சிங்கப்பூர், கஜகஸ்தான் போன்ற நாடுகளின் இடங்களில் பெரிய மாற்றம் இன்றி ஓரிரு இடங்கள் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *