வாஷிங்டன், ஜூன் 14–
சர்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் 19–ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் என்ற திட்டத்தை 2027ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இதன் நோக்கம் ஆகும். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஜூன் 10ம் தேதி ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பம், வானிலை காரணமாக அது மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. திரவ ஆக்சிஜன் கசிவால் மீண்டும் தேதி குறிப்பிடாமல் விண்வெளி செல்லும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஹு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளனர். இதன்படி பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவை ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பால்கன் 9 ஏவுதளத்தில் உள்ள சிக்கல் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளதாக குழுக்கள் தெளிவுபடுத்தியதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது. கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.