சென்னை, பிப்.11–
சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 18ந்தேதி முதல் 25ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பி.வி.ஆர்.வுடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் 92 திரைப்படங்கள் பங்கு பெறவுள்ளன. பி.வி.ஆர். மல்டிபிளெக்ஸ்களான சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள் மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் திரையிடப்படும்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ‘ஆப்பிள்ஸ்’, ‘குவூ வாடிஸ், ஆய்டா?’, ‘லிஸன்’, ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’, ‘ஆக்னெஸ் ஜாய்’, ‘ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட்’ மற்றும் ‘ரன்னிங் டு தி ஸ்கை’ ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன.
தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்பாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க.பெ ரணசிங்கம்’ ‘கன்னி மாடம்’. படங்கள் திரையிடப்படுகின்றன. முதல் முறையாக ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, எத்தியோபியா, கிர்கிஸ்தான், லெபனான், மோனாகோ ருவாண்டா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.