செய்திகள்

நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்: ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதை

Spread the love

நியூயார்க்,செப்.11–

18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நியூயார்க்கில் கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த இடத்தில் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி காலை 8:46 மணிக்கு (அமெரிக்க நேரப்படி), அல்-குவைதா பயங்கரவாதிகள் 19 பேர், அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். முதலிரண்டு விமானங்களை தாழ்வாக பறக்க வைத்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்தனர். மோதிய ஒரு மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாயின. அருகிலிருந்த 10 கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகின. இதில் இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர். மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் இறந்தனர்.

நான்காவது விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சண்டை நடந்தது. முடிவில் இதுவும் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர். இச்சம்பவத்தால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பை ஒழித்துக்கட்ட ‘பயங்கரவாதிகள் மீது போர்’ என்ற நடவடிக்கையை அமெரிக்கா துவக்கியது.

ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா மற்றும் அல்-குவைதா பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ‘நேட்டோ’ படையினர் தாக்குதல் தொடுத்தனர். சுமார் 9 ஆண்டுகளாக நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் 2011 மே 2ம் தேதி, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், புதிதாக வர்த்தக மைய கட்டடம் 2014 நவம்பர் 3ல் திறக்கப்பட்டது. ‘நேஷனல் செப்டம்பர் 11 ‘மெமோரியல் அண்ட் மியூசியம்’, பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் நினைவு மையங்கள் திறக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *