அன்று ஜனனியின் வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டாட்டமுமாக இருந்தது. ஏனெனில் சுமித்ராவை பெண் பார்க்கும் படலம் வெற்றிகரமாக முடிந்தது தான்.
ஜனனி ஒரு பெரிய கெமிக்கல் என்ஜினீயர். அதில் டாக்டரேட்டும் வாங்கி இருந்தாள். தகுந்த வரன் அமைய வேண்டுமே என்று அப்பா ரங்கநாதன் கவலையில் இருந்தபோது தான் ஸ்ரீகாந்தின் ஜாதகம் வந்தது. அவன் எலெக்ட்ரானிக்ஸ் துறை வல்லுநர். அவனும் டாக்டரேட் பட்டமும் வாங்கி இருந்தான். இருவருமே அவரவர் துறையில் உள்ள இந்தியாவின் தலைசிறந்த கம்பெனியில் பெரிய பதவியில் இருந்தனர்.
பெண்ணை ஸ்ரீகாந்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. ஜனனியும் சம்மதித்து விட்டாள். எல்லா நடைமுறை வழக்கங்களையும் பெரியவர்கள் பார்த்து முடித்து விட்டனர். முடிந்தது என்று நினைத்து மன மகிழ்ந்திருந்தனர்.
ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் எல்லாம் சரிதான், ஆனால் ஜனனி அந்த பெட்ரோ கெமிக்கல் துறையிலிருந்து வெளி வந்து தன் எலெக்ட்ரானிக்ஸ் துறைக்கு வந்தால் மட்டுமே திருமணம் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில் ஜனனியின் துறை எப்போதும் ஊரைவிட்டு வெளியே தான் இருக்கும். தன் வேலை அப்படி இருக்காது. அதனால் ஜனனி தன் துறையை மாற்றி என் துறைக்கு வந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டான்.
ஜனனி தன் பங்குக்கு வீராப்பு காட்டினாள். தான் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்த படிப்பை விட்டு விலக மாட்டேன். இந்த வேலையையும் உதறமாட்டேன். இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டால் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன் என்று உறுதியாக தன் கொள்கையில் பிடிவாதமாக நின்றாள். திருமணம் செய்ய நிச்சயம் வரை சென்று நின்று போய் விட்டது.
இந்தத் திருமணம் நின்றதில் இரு வீட்டு பெரியவர்களுக்கும் மன வருத்தம் தான்.
காலம் ஓடிக் கொண்டிருந்தன. ஸ்ரீகாந்திற்கு வேறு பெண் எதுவும் ஒத்து வரவில்லை. ஜனனிக்கும் வேறு வரன் அமையவில்லை. ஜனனியும் எதுவும் கவலைப்படவில்லை. இனிமேல் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலைக்கும் தாய் – தந்தையர் முடிவெடுத்து ஒதுங்கிக் கொண்டனர்.
ஜனனிக்கு கொடைக்கானலில் ஒரு புதிய Oil Company நிறுவும் திட்டம் பற்றி விவாதிப்பதற்கு உலகளவில் உள்ள என்ஜினியர்கள் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அதே சமயம் கொடைக்கானலிலேயே ஸ்ரீகாந்தின் கான்பரன்ஸ் காரணமாக அங்கே வந்திருந்தான். ஒரு நாள் எதேச்சையாக கீழிருந்த ரெஸ்டராண்டில் சாப்பிட அமர்ந்திருந்தனர். சந்தித்துப் பேசவும் செய்தனர். நாளை மறுநாள் ஏதாவது பூங்கா சென்று வரலாம் என்றும் முடிவு செய்தனர். முடிவு செய்தது போலவே மாலை பூங்காவில் சந்தித்துக் கொண்டனர்.
ஸ்ரீகாந்த் நட்புடன் ஜனனியிடம் அவள் குடும்ப வாழ்க்கை பற்றி விசாரித்தான். ஜனனியும் அவனின் குடும்ப வாழ்க்கை பற்றி விசாரித்தாள்.
ஜனனி தனக்கு 2 மகன்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றாள். ஸ்ரீகாந்தும் தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாக கூறினான். ஸ்ரீகாந்த் தான் அறைஎண்:18ல் தங்கி இருப்பதாக கூறுகிறான். ஜனனி தான் அறைஎண்:81ல் இருப்பதாக கூறினாள்.
மறுநாள் ஸ்ரீகாந்த் ஜனனி தங்கியிருக்கும் ரூமிற்கு போய் பார்த்தான். அதில் மிஸ்.ஜனனி என்று போட்டிருந்தார்கள். ஸ்ரீகாந்திற்கு சந்தோஷம் கலந்த ஆச்சர்யமாக இருந்தது.
அன்று மதியம் ஜனனி ஸ்ரீகாந்த் அறைக்குச் சென்று கதவை தட்டுகிறாள். கதவைத் திறந்த ஸ்ரீகாந்த் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அது அவன் அம்மாவுடன் என்று தெரிந்தது.
அவன் அம்மா ‘‘உனக்கு எப்போது கல்யாணம் ஆகுமோ? ’’என்று கவலையோடு சொன்னாள். இன்று கூட தான் குன்றத்தூரில் உள்ள கார்த்திகாயினி கோவிலுக்கு போய் வந்ததாக அம்மா கூறினாள் .
அது ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் திருமணமான இடம் என்று சொன்னார்கள். ஸ்ரீகாந்த் அதற்கு எனக்கும் கல்யாணம் கூடி வந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள் அம்மா. நான் என் மனதிற்கு பிடித்த பெண்ணை பார்த்து விட்டேன் என்று ஜனனியை பார்த்துக்கொண்டே தன் தாயாருக்கு பதில் அளித்தான் ஸ்ரீகாந்த்.
ஜனனி மத்தாப்புப் புன்னகை பூத்தாள்: இருவரும் இணைந்தனர்.
#சிறுகதை