மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, ஜூலை 14–-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் அரசு தடுப்பூசி மையங்களில் கொரோனா ‘பூஸ்டர் டோஸ்’ இலவசமாக போடப்படுகிறது.
உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா கடந்த ஆண்டு ஜனவரி 16–-ந் தேதி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் தொடங்கி பல்வேறு கட்டங்களாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 16-–ந் தேதி முதல் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தற்போது நாட்டில் முதல் ‘டோஸ்’ தடுப்பூசியை மக்கள் தொகையில் 96 சதவீதத்தினர் செலுத்திக்கொண்டுள்ளனர். 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் 87 சதவீதத்தினர் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 10–-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி, முன் எச்சரிக்கை ‘டோஸ்’ என்ற பெயரில் செலுத்தப்படுகிறது.
18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் தடுப்பூசி மையங்களில் கட்டணம் செலுத்தி ‘பூஸ்டர் டோஸ்’ போடப்பட்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் இந்த பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்பட்டு வருகிறது.
77 கோடி பேர் (18–-59 வயது பிரிவினர்) ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் 1 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே உரிய கட்டணம் செலுத்தி, ‘பூஸ்டர் டோஸ்’ பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால் இலவசமாக ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்தும் தகுதி படைத்தவர்களில் 16 கோடி பேரில் 26 சதவீதத்தினர் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கும் இந்த ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான 75 நாள் சிறப்பு திட்டம் நாளை (15-ந் தேதி) தொடங்குகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததன் 75–-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்த திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடி பாராட்டு
எனவே 2–-வது ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டு, 6 மாதங்கள் ஆன 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள், நாளை முதல் அரசு தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம். மத்திய மந்திரிசபையின் இந்த முடிவை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கொரோனாவை எதித்து போராடுவதற்கு தடுப்பூசி ஒரு சிறந்த ஆயுதமாகும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் போடும் மந்திரிசபையின் இன்றைய முடிவு, இந்தியாவின் தடுப்பூசி பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் ஒரு ஆரோக்கியமான நாட்டையும் உருவாக்கும்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.