சென்னை, பிப்.23
18 அமைப்பு சாரா நலவாரியங்க ளில் பதிவான 84 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2220 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்கள் நல வாரியத்தை அமைத்ததுடன், தற்போது தமிழ்நாட்டில் 18 அமைப்பு சாரா நல வாரியங்கள் உள்ளன. தற்போது, இந்த வாரியங்களில் 26,67,355 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 2011ஆம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையில், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட 84,32,473 பயனாளிகளுக்கு, நல நிதி உதவியாக 2,219.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2020 -21ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், உயர்த்தப்பட்ட ஒதுக்கீடாக அமைப்பு சாரா நல வாரியங்களுக்கு மானியத் தொகையாக 149.86 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சென்னை மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 1,20,309 பதிவு பெற்ற கட்டுமானப் பணியாளர்கள் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவை உட்கொள்கின்றனர். ஊரடங்கின் போது, 22.75 இலட்சம் அமைப்பு சாரா பணியாளர்களுக்கும் மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 143.52 கோடி ரூபாய் மதிப்பில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. பதிவு பெற்ற அமைப்பு சாரா பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.100 -வீதம் 475.13 கோடி ரூபாய் நிதியுதவி மூன்று தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.