செய்திகள்

17,337 கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா இணையதள சேவை

வேலூர், பிப். 21

வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 17,337 கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டே்டா இணையதள சேவை வழங்கும் பணிகளை கலெக்டர் அ.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.

வேலூர் மண்டலத்தில் உயர் கல்வித்துறை கட்டுபாட்டிலுள்ள 5 பொறியியல் கல்லூரிகள், 8 பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 17,337 மாணவ,மாணவிகளுக்கு 2 ஜிபி இணையதள டேட்டா கார்டுகளை வழங்கும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் ரஹிலாபிலால், முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி முதல்வர் அ.மலர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது.

முதல்வரின் ஆணைப்படி, வேலூர் மாவட்டத்தில் உயர் கல்வித்துறை சார்பில் பொறியியல் கல்லூரி, பல் தொழில்நுட்ப கல்லூரி, கலை கல்லூரிகளில் பயிலும் 17,337 மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜிபி இணையதள டேட்டா கார்டுகள் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு நல்ல முறையில் பயில இந்த 2 ஜிபி இணையதள டேட்டா வழங்கப்படுகிறது. மாணவர்கள் நல்ல முறையில் பயின்று நமக்கு நல்ல கல்வியை தந்த சமுகத்திற்கு உதவிடும் வகையில் மத்திய அரசு பணி, மாநில அரசு பணி, வங்கி பணிகளில் சேர்வதற்கு தேர்வுகளை எழுதி அச்சப்படாமல், பதற்றம் அடையாமல் நேர்முக தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வேலை வாய்ப்பை பெற வேண்டும். அரசு பணி கிடைக்கவில்லை என்றால் சுயமாக தொழில் துவங்கி பல்வேறு அத்தியாவசிய தேவையான உதிரி பாகங்கள், இயந்திரங்களை தயாரிக்கும் தொழில் துவங்கலாம்.

இந்திய அளவில் தமிழகம் உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை கல்லூரிகள், பல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளது. இந்தஅறிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய மாணவர்கள் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் தங்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, கூட்டுறவு சங்க இயக்குநர் ஜனனி சதிஷ் குமார், வேளாண் விற்பனைக்குழு துணை தலைவர் குப்புசாமி, கல்லூரி பேராசிரியர்கள் தந்தை பெரியார் கல்லூரி ஜெ. ஸ்ரீராம் பாபு , முத்துரங்கம் கலை கல்லூரி பேராசிரியர்கள் எஸ்.மாரிமுத்து, ஸ்ரீதரன், சீனுவாசகுமரன், வட்டாட்சியர் ரமேஷ், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *