செய்திகள்

10 ஆண்டுகளில் புதிதாக 17 புதிய மருத்துவ கல்லூரிகள் துவக்கி சாதனை

சென்னை, பிப்.6

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

தமிழ்நாட்டில் மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,809. அதில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8,41,251. இதில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,056. 12 ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3,44,485. இதில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சதவிகிதம் – 41.41 சதவிகிதம் அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்விலே 6 மாணவர்கள் தான் மருத்துவக் கல்லூரியிலே சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது மருத்துவ கல்லூரியின் இடம் 3,650. இதில் 7.5 சதவிகித இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 41 சதவிகிதம் அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டின் மூலம் நடப்பாண்டில் 435 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பை இன்றைக்கு நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம்.

அதிக மருத்துவ இடங்கள்

அரசு பள்ளியில் ஏழை, எளிய மாணவர்கள் தான் அதிகமாக படிக்கிறார்கள். அவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கிய அரசு அம்மாவின் அரசு. 2011 ல் திமுக ஆட்சி முடிவடையும்போது மருத்துவ கல்வி பயில்வதற்கு 1,945 இடங்கள் தான் தமிழகத்திலே இருந்தன. இதனை அம்மா ஆட்சி செய்த 2011 முதல் அவர் மறைந்த வரை ஆட்சி செய்த காலத்திலே 3,060 ஆக உயர்த்தினார். அதாவது, 1,115 இடங்களை புதியதாக மருத்துவக் கல்வி பயில அம்மா அதிகரித்தி கொடுத்தார்.

நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து 3,060 ஆக இருந்த மருத்துவம் பயிலும் இடத்தை 3,650 ஆக உயர்த்தியுள்ளேன். இப்பொழுது ஒரே ஆண்டில் வரலாற்றுச் சாதனையாக 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,650 மருத்துவம் பயிலும் இடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து முதல் கட்டமாக 590 பேர் மருத்துவர்களாக சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு, இப்போது 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தோற்றுவித்ததன் மூலமாக அதிலிருந்து 1,650 பேர் புதிதாக மருத்துவம் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு, இரண்டும் சேர்த்தால் இந்த நான்கு ஆண்டு காலத்திலே 2,240 பேர் புதிதாக மருத்துவக் கல்வி படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்த அரசு எங்களுடைய அரசு.

புரட்சித் தலைவி அம்மா 2011 ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து அம்மா மறைகின்ற வரை 1,115 பேர் புதிதாக மருத்துவக் கல்வி படிக்கின்ற வாய்ப்பை உருவாக்கி தந்தார். அம்மாவின் மறைவிற்கு பிறகு, அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக 2,240 பேர் புதிதாக மருத்துவக் கல்வி படிக்கின்ற வாய்ப்பை உருவாக்கி தந்தது. 2011-லிருந்து 2021 வரை அம்மாவுடைய அரசு 3,355 பேர் மருத்துவக் கல்வி படிக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்த அரசு எங்களுடைய அரசு. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் மொத்தம் 5,300 இடங்கள் இன்றைக்கு இருக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வரலாற்று சாதனை படைத்த அரசு அம்மாவுடைய அரசு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *