போஸ்டர் செய்தி

சுவர் இடிந்து 17 பேர் பலி: நாளை கோவை செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Spread the love

இன்று அதிகாலை நடந்த பரிதாபம்

உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதிஉதவி

சென்னை, டிச.2–

கடும் மழை காரணமாக இன்று அதிகாலை கோவையில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவித்து தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை செல்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று (2–ந் தேதி) அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில், குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் ஆகிய 15 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பலத்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த இந்த 15 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. அந்த குடும்பத்தினருக்கும் முதல்வர் ஆறுதல் கூறி தலா ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஆனந்தகுமார், அருக்காணி, சிவகாமி ஆகியோரது வீடுகளுக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான 17 அடி நீளம் 15 அடி உயரம் கொண்ட வீட்டு காம்பவுண்ட் சுவர் உள்ளது. அதிகாலை 5.30 மணி அளவில் பலத்த மழையால் காம்பவுண்ட் சுவர் திடீரென இடிந்து 3 வீடுகளின் மேல் விழுந்தது. அதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 12 பெண்கள், மூன்று ஆண்கள், இரண்டு குழந்தைகள் என 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனந்த் (வயது 40), அவரது மனைவி நதியா (30), மகன் லோகு ராம் (7), மகள் அக்ஷயா (9) மற்றும் அருக்காணி (55), அவரது அம்மா சின்னம்மாள் (72)அக்கா ருக்குமணி (40), மகள்கள் ஹரிஷ் சுதா (17), மகாலட்சுமி (14) மற்றும் சிவகாமி (50), மகள் வைதேகி (22), அம்மா ஓபம்மாள், அவரது உறவினர் மகன் ராமநாதன் (15), மகள் நிவேதா (18) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த மங்கம்மாள், திலகவதி (50), குருசாமி (45) என 17 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் கலெக்டர் ராசாமணி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட எஸ்பி சுஜித் குமார், ஆர்டிஓ சுரேஷ், ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி, இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி மேல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தனர்.

மீட்கப்பட்ட உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, தகவல் அறிந்து ஓ.கே.சின்னராஜ் எம்எல்ஏ, நகர செயலாளர் வான்மதி சேட், தொழிலதிபர் டிஆர் சண்முகசுந்தரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *