சத்யபிரதா சாகு பேட்டி
சென்னை, ஜன.5–
17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
17 வயது பூர்த்தியானவர்களும் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். 18 வயது ஆனதும் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வருடத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பணிகள் நடைபெறும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை
100 ரூபாய் செலுத்தினால் பி.டி.எப். வடிவத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் போட்டோ இருக்காது.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட வர்களுக்கு 1 மாதத்தில் வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக புலம்பெயர்ந்த வாக்காளர்கள் ரிமோட் மூலம் வாக்களிப்பதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அண்ணா தி.மு.க.விற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் அடிப்படையில் கடிதம் அனுப்பப்பட்டது.முதலில் ஆள் மூலம் கொடுத்து அனுப்பினோம். அதை வாங்க மறுத்ததால் ஸ்பீடு தபாலில் அனுப்பி வைத்தோம். அவர்கள் அதை திருப்பி அனுப்பிய தகவலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம். அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதை தான் பின்பற்ற முடியும் என்றார்.