போஸ்டர் செய்தி

17 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை நேர்காணல்: அண்ணா தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 16–

சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் நாளை (17–ந்தேதி) நேர்காணல் நடைபெறவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க.வின் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல், தலைமை கழகத்தில் 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

17 தொகுதிகளுக்கு

பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி (தனி), சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), நிலக்கோட்டை (தனி), சாத்தூர், மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி), விளாத்திகுளம் ஆகிய 17 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

அண்ணா தி.மு.க.வின் வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கோரி, தங்கள் பெயரில் விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் 17–ந்தேதி காலை 9.30 மணிக்கு, விருப்ப மனுக் கட்டண ரசீதுடன் தவறாமல் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

திருவாரூர்

திருவாரூரில் ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. 352 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *