கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை, மார்ச் 3–
17 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை சென்னை காவல்துறை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னையைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் வியாபார ஒப்பந்தம் செய்து நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் கடந்த 13.09.2003ம் தேதி 9 பேர் கும்பல் முகமது சமீர் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களை மிரட்டியும், மேலாளர் மற்றும் கணக்காளரை தாக்கியும், மிரட்டியும் நிரப்பப்படாத ஏழு காசோலைகளில் கையெழுத்து வாங்கி அதில் ரூ.41,80,000 க்கு நிரப்பப்பட்டு அதை வைத்து புகார்தாரர் முகமது சமீரை மிரட்டி வந்தனர்.
இது தொடர்பாக 2003ம் ஆண்டு கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 2 பேர் தலைமறைவானார்கள். 17 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த எதிரிகளை கைது செய்ய கமிஷனர் ஆ.அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.ராதிகா வழிகாட்டுதலின் பேரில், காவல் துணை ஆணையாளர் மேற்பார்வையில், காவல் உதவி ஆணையாளர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக எதிரிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இவ்வழக்கினுடைய 8வது எதிரி கோகுல் என்பவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்டார் என தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன் (70) கைது செய்யப்பட்டார். வின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, பிடியாணை நிறைவேற்றப்பட்டது.ந்
இந்த வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளி ஜனார்த்தனன் என்பவரை கைது செய்து நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றிய மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பி.சி.சிவக்குமாரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.