செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக 16-வது பட்டமளிப்பு விழா: 4075 மாணவ, மாணவியருக்கு பட்டம்

Spread the love

சென்னை, பிப்.28–

அண்ணா பல்கலைக்கழக 16-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கே.சுரப்பா தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி வரவேற்றார். இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கவுன்சில் டைரக்டர் ஜெனரல் சேகர் சி.மண்டே 4,075 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் மிகக் குறைந்த காலத்தில் நாட்டிலேயே மிகச்சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உருவானது. இங்கு கடினமாக படித்து முடித்து பட்டம் பெறும் மாணவ, மாணவிகளின் வாழ்வில் இன்றைய நாள் முக்கிய தருணமாகும். எதிர்காலத்தில் நீங்கள் நினைப்பது எல்லாம் அப்படியே நடக்கும் என்று கூற முடியாது. ஆனால், அதன்மூலம் கிடைக்கும் அனுபவம் புதிய பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்.

இந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் செலவிட்ட நேரம், எத்தகைய சூழலையும் எதிர் கொள்ளும் ஆற்றலை உங்களுக்கு வழங்கும். பொதுவாக ஒன்று சொல் வார்கள். புள்ளிவிவரம் என்பது வெறும் தகவல் மட்டுமல்ல. அதுவே அறிவு மற்றும் புத்திக்கூர்மை ஆகும். இப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் உங்களுக்கு ஏராளமான புள்ளி விவரங்களை, தகவல்களை சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால், சிறந்த ஆசிரியர்கள் அத்தகவல்களை உங்களுக்கு அறிவுத் தொகுப்பாக தந்திருப்பார்கள்.

பூமியில் சிறந்த உயிரினமாக கருதப்படும் மனித இனம், இயற்கை யோடு இணைந்து வாழ்வதுடன், எதிர்கால சந்ததியினரைக் கருத்தில் கொண்டு இயற்கையை அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் காப்பாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது.

இங்குள்ள இளம் பட்டதாரிகள் சமூக சவால்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறையுடன் எதிர் கொள்வார்கள் என நம்புகிறேன். அதுவே வரும் ஆண்டுகளில் பெரிய வளர்ச்சிக்கு அத்தாட்சியாகத் திகழும். கண்டுபிடிப்புகளும், புதிய தொழில்நுட்பமும்தான் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

இவ்வாறு மண்டே கூறினார்.

விழாவில், சிவில் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம், கட்டிடக் கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயின்ற 4,075 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *