செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,688 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 1,688 பேருக்கு கொரோனா பாதிப்பு

2 ஆயிரத்து 173 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை, நவ.21-

தமிழகத்தில் நேற்று 1,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,031 ஆண்கள், 657 பெண்கள் என மொத்தம் 1,688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவரும், 12 வயதுக்கு உட்பட்ட 53 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 329 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 489 பேரும், கோவையில் 147 பேரும், திருவள்ளூரில் 132 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தூத்துக்குடியில் தலா 4 பேரும், பெரம்பலூரில் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 66 ஆயிரத்து 677 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 63 ஆயிரத்து 217 ஆண்களும், 3 லட்சத்து 3 ஆயிரத்து 427 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 27 ஆயிரத்து 14 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 97 ஆயிரத்து 422 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 568 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 173 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 705 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 13 ஆயிரத்து 404 பேர் உள்ளனர். சென்னை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், வேலூரை தவிர்த்து 30 மாவட்டங்களில் நேற்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பாதித்தவர்களும், குணமடைந்தவர்களும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 66 அரசு நிறுவனங்கள், 148 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 214 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 16 ஆயிரத்து 440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *