புதுடெல்லி, செப்.19-–
இந்தியாவும், மியான்மரும் 1,643 கி.மீ. எல்லையை பகிர்ந்து வருகின்றன. மொத்த எல்லையையும் சுமார் ரூ.31 ஆயிரம் கோடியில் வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்கள் மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த எல்லை வழியாக பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஆயுதம், வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த எல்லை அதிகமாக பயன் படுத்தப்படு கிறது. குறிப்பாக மியான்மரை சேர்ந்த கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் மணிப்பூரில் பெரும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஓராண்டுக்கு மேலாக தொடரும் வன்முறை சம்பவங்களுக்கும் மியான்மர் நாட்டு பயங்கரவாத குழுக்கள் காரணமாக இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 30 கி.மீ. தொலைவுக்கு அங்கே வேலி அமைக்கும் பணிகள் முடிவடைந்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் தெரிவித்தார். இதைப்போல ஒட்டுமொத்த 1,643 கி.மீ. எல்லையிலும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியும் ஒப்புதல் அளித்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.