செய்திகள்

16,17–ந்தேதிகளில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக

16,17–ந்தேதிகளில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 

புதுடெல்லி, ஜூன்.13-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 16, 17–ந்தேதிகளுடன் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் 5 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அடுத்த வாரம் மீண்டும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநிலங்களை இரு பிரிவுகளாக பிரித்து நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மேற்கொள்ளும் 6-வது ஆலோசனை கூட்டம் இதுவாகும். கடைசியாக கடந்த மாதம் 11-ந்தேதி மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது மோடி கூறுகையில், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசுகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. கொரோனாவில் இருந்து இந்தியா தன்னை சிறப்பாக பாதுகாத்து வருவதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிராக நாம் இனியும் தொடா்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலங்கள் அளிக்கும் யோசனைகளுக்கு ஏற்ப மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *