சினிமா செய்திகள்

16 வயது இளைஞன் தோற்றத்துக்காக 40 கிலோ எடை குறைத்த அர்ஜுன் மருமகன் துருவா!

“என் மருமகன் துருவா. ‘செம திமிரு’ படத்தில் 16 வயது இளைஞன் தோற்றத்துக்காக அந்த கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்’ என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தெரிவித்தார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான 3 படங்களும் அபார வெற்றி. இப்போது ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நாளை (19ந் தேதி) ரிலீஸ். தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

துருவா சர்ஜா, ஆக்ஷன் கிங் அர்ஜூனின் தங்கை மகன். நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா.

அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, கதையாசிரியர் அருண் பாலாஜி, தயாரிப்பாளர் எஸ்.சிவா, அர்ஜூன் படத்தை தமிழில் வெளியிடுகிற ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசும்போது, ‘துருவா தனக்கு நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதுவும் ஹீரோவா நடிக்கணும்கிற ஆர்வத்தோட வந்தார். ஹீரோவாகுறதுக்கு முன்னே நடிகன் ஆகணும். ஆனா, அதெல்லாம் சுலபம் இல்லை. நீ சின்னப்பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்’னு அட்வைஸ் பண்ணேன். அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து, தானே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி, தானே டைரக்ட் பண்ணி, நடிச்சு ஒரு சி.டி.யில பதிவு பண்ணி கொண்டு வந்தார். பார்த்து அசந்துபோனேன்.

‘செம திமிரு’ படத்துக்காக 2½ வருஷம் கடுமையா உழைச்சிருக்கார். படத்துல 16 வயசுப் பையன், நல்லா வளர்ந்த இளைஞன்னு ரெண்டு விதமா வர்றார். சிறுவயது தோற்றத்துல நடிக்கிறதுக்காக 40 கிலோவரை எடை குறைச்சார். அந்தளவு நடிப்பு மேல ஈடுபாடு. படத்துல சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடின்னு எல்லாம் இருக்கும். ஆக்ஷன் ரொம்பவே தூக்கலா இருக்கும் என்று துருவாவை அறிமுகப்படுத்திப் பேசினார்.

சர்வதேச உடற்திறன் சாம்பியன்கள் கைக்ரீன், மோர்கன் அஸ்தே, ஜான் லூகாஸ், ஜோய்லிண்டர் இதில் நடித்திருக்கிறார்கள்.”பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் பேர்போன இந்தியாவுக்கு வந்தது, இந்தியப் படத்துல நடிச்சது பெருமையா இருக்கு” என்றார்.

‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ டி.முருகானந்தம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார். இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரித்துள்ளனர். ஓளிப்பதிவை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் கையாண்டுள்ளார், இசை சந்தன் ஷெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *