வேலூர், ஏப்.3-
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் உருவாக காரணமான நிகழ்வு குறித்த தகவலை வேலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்றைக்கு கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவம் சொல்வார்கள். காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை சந்தித்து, இன்றைக்கு பள்ளிக்கு போகவில்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த சிறுவர்கள், குடும்பத்தில் உணவுக்கே வழியில்லாததால் எங்கள் அப்பா, அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை என்று சொல்லவும், பள்ளியில் மதிய உணவு அளித்தால் அதற்காகவாவது குழந்தைகளை பெற்றோர் படிக்க அனுப்புவார்கள் என்று சிந்தித்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.
எனக்கும் அதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சர் ஆனவுடன், சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு காலையில் சென்றிருந்தேன். அப்போது ஒரு குழந்தையை பார்த்து என்னம்மா சாப்பிட்டியா? என்று கேட்டேன். அதற்கு அந்த குழந்தை வீட்டில் அப்பா, அம்மா வேலைக்கு செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள். அதனால் சாப்பிடவில்லை என்று சொன்னதும் எனக்கு மனது சரியில்லை. கோட்டைக்கு சென்றவுடன் அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வர வேண்டும். திட்டத்தை தயார் செய்யுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையில்கூட இதனை சொல்லவில்லை என்று கூறினார்கள்.
உடனே நான், வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன?. நம்முடைய எதிர்கால தலைமுறை குழந்தைகள்தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலைமையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஆவணங்களை தயார் செய்யுங்கள் என்று உத்தரவு போட்டேன். அப்படி கொண்டு வந்த கோப்பில் கையெழுத்து போட்ட கைதான் இந்த ஸ்டாலின் கை.
வரலாறும், மக்களான நீங்களும் எனக்கு கொடுத்த வாய்ப்பால் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடும் காலை உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.