மோடி ஆட்சியில் 10% பணக்காரர்களிடம் இந்தியாவின் 80 சதவீதமான சொத்துகள் செல்வப்பெருந்தகை புள்ளிவிவரத்துடன் அம்பலம்
சென்னை, ஏப். 10–
மோடி ஆட்சியில் 1 சதவீத பணக்காரர்கள் மட்டுமே வளர்ந்துள்ளனர் என்றும், நடுத்தர, ஏழைகளின் வருவாய் குறைந்திருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புள்ளிவிவரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட நியாய பத்திரம் என்ற தேர்தல் அறிக்கை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, நச்சுத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விடுதலை போராட்ட காலத்தில் முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையை போல அமைந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
ஆனால், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் 1937 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 1940 இல் வங்காளத்தில் முஸ்லிம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த இன்றைய பா.ஜ.க.வின் நிறுவன தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜி பங்கேற்றதை எவரும் மறைத்துவிட முடியாது. மக்களை பிளவுபடுத்துகிற அரசியலின் அடிப்படையில் பிரதமர் மோடி இத்தகைய விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார்.
1 சதவீதத்தினரின்
சொத்து அதிகரிப்பு
10 ஆண்டுகளில் 140 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்கிற பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களுடன் அதிர்ச்சி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அண்மையில் உலக சமத்துவமின்மை பரிசோதனைக் கூடம் என்கிற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 1922 முதல் 2023 வரை நிலவுகிற வருமான சமமின்மை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நிலவும் வருமான சமத்துவமின்மை பற்றி குறிப்பிட்ட அந்த அறிக்கை 2022-23 இல் மக்கள் தொகையில் 22.6 சதவிகிதத்தினரின் தேசிய வருமானம் 1 சதவிகிதம் தான் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வருமான வேறுபாடு அதிகரித்திருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல, சொத்து சமத்துவமின்மையில் மேல்தட்டில் உள்ள 1 சதவிகிதத்தினரின் சொத்து 2022-23 இல் 40.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறிப்பிட்ட 1 சதவிகிதத்தினர் சொத்துகளை குவிப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
மேலும், 10 சதவிகித கோடீஸ்வரர்களின் சொத்து பலமடங்கு கூடியிருப்பதை இந்த புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. அதற்கு மாறாக, கீழ்நிலையில் உள்ள 50 சதவிகித மக்களின் சொத்து பலமடங்கு ஆண்டுக்கு ஆண்டு குறைந்திருக்கிறது. பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் மாறிக் கொண்டு வருவதை காண முடிகிறது.இந்தியாவில் நிலவுகிற வருமான சமத்துவமின்மை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமான அளவில் அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 10 சதவிகித பணக்காரர்கள் 80 சதவிகித தேசிய சொத்துகளை அபகரித்திருப்பதாக ஏற்கனவே ஆக்ஸ்பார்ம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 16 கோடீஸ்வரர்களின் சொத்து மக்கள் தொகையில் 60 கோடி மக்களின் சொத்துக்களுக்கு சமமாக இருப்பதாக அந்த அறிக்கை ஏற்கனவே கூறியிருந்தது. இதுதான் மோடி ஆட்சியில் நிலவுகிற வருமான சமத்துவமின்மையின் அடையாளமாகும். இதன்மூலம் பா.ஜ.க. ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் யாருக்காக நடைபெற்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்தியர்கள் கடன் உயர்வு
நேற்றைய ஆங்கில நாளேட்டில் வெளியான சர்வதேச பொருளாதார சேவை நிறுவனம் டிசம்பர் 2023இல் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை மேலும் அதிகரித்திருக்கிறது. அதன்படி இந்திய குடும்பங்களின் மொத்த கடன் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 40 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்திருப்பதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது.
அதேநேரத்தில் மக்களின் சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துக்களை குவிக்க உதவுவதும், அதன்மூலம் அவர்கள் பெற்ற பலனுக்கு கைமாறாக சட்டத்தின் மூலமாகவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் நன்கொடைகளை குவித்ததும், அதன்மூலம் தேர்தல் களத்தில் சாதகமான சூழலை உருவாக்குவதிலும் பிரதமர் மோடி தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், பொருளாதார பாதிப்பின் காரணமாக பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனடிப்படையில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.