சென்னை, அக்.3-
தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இதன்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ்வும், வருவாய் நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், துணை முதலமைச்சரின் தனிச் செயலாளராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் சுந்தரவல்லி, கல்லூரிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
பொதுத்துறை இணைச் செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சமூகநலன் ஆணையர் அமுதவல்லி, கைத்தறி, கைவினை ஜவுளி மற்றும் காதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் லில்லி, சமூகநலன் ஆணையராக மாற்றப்பட்டார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (வருவாய் மற்றும் நிதி) லலிதா, ஜவுளி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர், பொதுத்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் சிறப்புப் பணி அலுவலராகவும் அவர் செயல்படுவார்.
தலைமை தேர்தல் அதிகாரியும், பொதுத்துறை (தேர்தல்கள்) முதன்மைச் செயலாளருமான சத்யபிரதா சாகு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் மறு உத்தரவு வரும்வரை முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ்குமார், மனிதவள மேலாண்மைத் துறையின் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
மனிதவள மேலாண்மைத் துறையின் செயலாளர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதித்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுவர்னா, ராஷ்டிரிய உச்சதர் சிக் ஷா அபியான் திட்டத்தின் மாநில திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை துணைச் செயலாளர் பிரதிவிராஜ், சென்னை மாநகராட்சி துணைக் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) மாற்றப்பட்டார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் ஜெயகாந்தன், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.