செய்திகள்

16 இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மார்ச்.8-–

மீன்பிடித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்படகை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) கடந்த பிப்ரவரி 9-ந்தேதியன்று புனித மேரி என்ற பெயர் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அம்மீனவர்கள் பிப்ரவரி 23-ந்தேதியன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் டியாகோ கார்சியா அதிகாரிகளால் அவர்கள் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இப்பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில், இக்கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும். எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தை உடனே எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *