செய்திகள்

16ந் தேதி விவசாயிகளுடன் பேசுகிறார் முதலமைச்சர்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை, ஏப்.14–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 16ந் தேதி அன்று ஓராண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாய பெருமக்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடவுள்ளார் என்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில், ஓராண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாய பெருமக்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 16ந் தேதி அன்று காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் எதிர்வரும் கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்தும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் ஆணைப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தின் மொத்த தேவையினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து அலுவலர்களையும் மின்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

10 ஆண்டுகளாக காத்திருப்பு

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:–

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக் கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் சிறப்பான திட்டத்தை 23.9.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தொடக்கி வைத்தார்.

கடந்த 6 மாத காலத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவரின் தலைமையின் கீழ் அனைத்து அலுவலர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்பு

இந்த திட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 16ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவகத்திற்கு வருகை புரிந்து ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்குவதற்கான விழாவில் தலைமையேற்று பயன் பெற்றுள்ள விவசாயிகளிடம் காணொளிக் காட்சி வாயிலாக சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இந்த கோடைகாலத்தில் இதுவரை இல்லா உச்ச அளவாக 17,196 மெகா வாட் அளவிற்கான மின் தேவையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பூர்த்தி செய்து இருக்கிறது.

முதலமைச்சரின் ஆணை

பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டுகள் இருந்தாலும் கூட தமிழகத்தில் சீரான மின் விநியோகம் செய்யப்பட வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு முதல்வரின் ஆணை.

இந்த கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவு. அந்த உத்தரவின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.